கி.பி 2022 ஆங்கிலப் புத்தாண்டா? சர்வதேசப் புத்தாண்டா?

பூமி சூரியனைச் சூற்றும் மற்றுமொரு முழுமையான சுற்று, இந்திய நேரப்படி நேற்று (31.12.2021) பிற்பகல் 2:30 மணிக்கு, பூமிக் கோளத்தின் கிரிபாட்டி (Christmas Island) தீவுப் பகுதியில் தொடங்கி இன்று (01.01.2022) மாலை 5:30 மணிக்கு பாகர் & ஹாலந்து தீவுகளின் பகுதியோடே நிறைவாகிறது.

இதனூடாய் சர்வதேச மக்களோடு நாமும் முழுமையாக கி.பி 2022-ற்குள் கடந்து வரப்போகிறோம்.

நாம் தற்போது பயன்படுத்தும் சனவரி 1-ல் தொடங்கும் நாட்காட்டியானது கி.மு 45-ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசர் உருவாக்கிய சூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமாக, சூரியச் சுற்றினை கணக்கில் வைத்து, இயேசு கிறித்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு, உலக வரலாற்றை கிறித்துவிற்கு முன் (கி.மு) & கிறித்துவிற்குப் பின் (கி.பி) என்று பகுத்து, இத்தாலிய மருத்துவர் அலோயிசியசு லிலியசு முன்மொழிய, கிறித்துவத் திருத்தந்தை 13-ஆம் கிரகோரி-யின் அறிவிப்புப்படி 24.02.1582 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நாட்காட்டி கிரெகோரியன் (Gregorian) நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

இது, நம்மவர்கள் (ஆட்சியாளர்கள் உட்பட) சுட்டுவதுபோல ஆங்கில நாட்காட்டி அல்ல.

இத்தாலியரின் உருவாக்கத்தில் முடிவாகி உலக நாடுகளால் பல்வேறு காலகட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச தபால் ஒன்றியம் & ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொது நாட்காட்டியாக இன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

கி.பி1752-ல் தான் பிரித்தானிய அரசு இந்நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது. அதாவது இந்நாட்காட்டி நடைமுறைக்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் கழித்துத்தான் ஆங்கிலேயர்களே இதை ஏற்றுக் கொண்டனர்.

அதன்பின், பிரித்தானியர்களின் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் சுமார் 500 நாடுகளிலும் (தனித்த மன்னராட்சிப்பகுதிகள்) இந்நாட்காட்டி பயன்படுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக, 1947 ஆகத்து 15-ல் உருவான இந்திய ஒன்றியத்திலும் நடைமுறையில் உள்ளது.

நிற்க. ஆங்கிலேயர்கள் என்று கூறப்படும் பிரித்தானியர்களால் இங்கு கொண்டுவரப்பட்டாலும் இது ஆங்கில நாட்காட்டி அல்ல என்பதால், 'கி.பி 2022 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!' எனத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

ஒவ்வொரு புத்தாண்டுத் தொடக்கமும் நமக்கு நினைவூட்டுவது,

அதிகரித்துவிட்ட வாழ்வியல் அனுபவ அறிவு!

ஓர் ஆண்டு குறைந்துவிட்ட எஞ்சிய ஆயுட்காலம்!

உலக வரலாற்றை இருகூறாக்கிய இயேசு கிறித்துவின் போதனையான, 💞'உங்களிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருங்கள்'💞_ என்பவையே!

வேதாகமம் 'அன்பு' குறித்து பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

💝நீடிய சாந்தமுள்ளது,
💝தயவுமுள்ளது,
💝பொறாமையில்லாதது,
💝தன்னைத்தான் புகழாது,
💝இறுமாப்பாயிராது,
💝அயோக்கியமானதைச் செய்யாது,
💝தற்பொழிவை நாடாது,
💝சினமடையாது,
💝தீங்கு நினையாது,
💝அநியாயத்தில் மகிழாது,
💝சத்தியத்தில் மகிழும்,
💝சகலத்தையும் தாங்கும்,
💝சகலத்தையும் விசுவாசிக்கும்,
💝சகலத்தையும் நம்பும்,
💝சகலத்தையும் சகிக்கும்.

பெற்ற அனுபவங்களை
உய்த்து உணர்ந்து,
உலக வரலாற்றை
இருகூறாய்ப் பகுத்திட்ட
இயேசுகிறித்து கற்பித்த
பரிபூரண அன்பினைப்
பகிர்ந்து அளித்து
எஞ்சிய காலமதை
இன்பமாக்கிக் களித்திருப்போம்!

அன்புகனியும் சர்வதேசப் புத்தாண்டு வாழ்த்துகள்!

No comments:

Post a Comment