அறிவோம் வருமானவரி! 3

👉🏽 CPS & GPF ஊழியர்களின் ஓய்வூதியப் பங்களிப்புகளுக்கு குறைந்தபட்சம் 2 இலட்சம் வரை தளர்வு தரும் 80CCD பிரிவுகள்

தமிழ் ஆண்டுப் பிறப்பு : தமிழுக்கான அறிவியல் தேவை!



தமிழ் நிலம் எந்நாளும் ஒற்றை ஆட்சிப்பகுதியாக இருந்ததே இல்லை என்பதால் ஒவ்வொரு நிலப்பரப்பும் அந்நிலப்பரப்பின் ஆளுகைக்குட்பட்ட மன்னர்களின் பிறப்பு / முடிசூட்டல் என்பதை வைத்தே கால வரையறை செய்யப்பட்டு வந்துள்ளது.


தமிழ் நிலத்திற்குரியது இயற்கை வழிபாடு / முன்னோர் வழிபாடே. தமிழ் நிலத்திற்கான பரந்துபட்ட சமயமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று மற்றதைக் கொன்று / கவர்ந்து நிமிர்ந்து வளர்ந்துள்ளது. இவ்வரிசை ஆசீவகம் - பௌத்தம் - சமணம் - சைவம் - வைணவம் என்று நீண்டு பார்ப்பனிய (Brahmanism)  ஆதிக்கத்தின் பின்பு, பிரித்தானியர் ஆட்சியில் இந்து என பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டது. இம்மாற்றங்களுக்கு ஆரியரின் வருகையே முதன்மைக் காரணம். இவ்வருகை வழிபாட்டில் மட்டுமல்லாது மொழியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


அரேபிய & ஐரோப்பியப் படையெடுப்புகளால் தமிழின் இனிமை குன்றவில்லை. மாறாகத் தமிழ் கடல் கடந்து எடுத்துச் செல்லப்பட்டது. இவர்களின் மார்க்க விரிவும் தமிழை அழிக்கவில்லை, மாறாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை மேன்மைக்குட்படுத்தியது. இவ்விரு மார்க்கமும் இங்கிருந்ததைச் சொந்தம் கொண்டாடவில்லை. கிறித்துவ வேதாகமமான விவிலியம் தமிழில் மொழி பெயர்ந்தது. திருக்குறள், திருவாசகம் உள்ளிட்டவை உலக மொழிகளில் விரிந்தது. மொழிசார் வளர்ச்சிக்கான அறிவியலின் கொடையெனில் அது அச்சுக்கருவியே! அதில் அச்சேறிய முதல் தெற்காசிய மொழி (விவிலியத்தின் வழி) தமிழே! இன்றும் தமிழ் முழுமையான அனுதினப் பயன்பாட்டில் இருப்பதும், தமிழறிஞர்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் பள்ளிகளைத் தவிர்த்து தமிழ்க் கிறித்தவர்களிடம் தான். அவர்களின் அனுதின ஆலய / இல்ல இறை தேடலின் வேத வாசிப்பின் வழி தமிழ் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், கோயில்களில் தமிழில் பூசை செய்ய வழக்காட வேண்டியுள்ளதே ஏன்?


நிற்க.

தமிழில் சமசுக்கிருதச் சொற்கள் நுழைவு என்பது ஆரியர்களின் வருகைக்கு பின்பானதே. திராவிட மொழிகளாகக் கருதப்படும் தெலுங்கு, மலையாள & கன்னட மொழிகளின் பிறப்பு என்பதும் சமசுக்கிருதச் சேர்கையால் உண்டான திரிபே!


ஆரியர்கள் தமது வேத சாத்திர & தந்திரக் கோட்பாடுகளை தமிழ் நிலத்தின் மீதிருந்த இறை வழிபாட்டுக் கூறுகளுடன் சேர்த்துக் கொண்டு (கவர்ந்து) யாவற்றிற்கும் தலைமையானதாகத் தங்களைச் சித்தரித்தனர். இச்சித்தரிப்பில் மயங்கிய மன்னர்கள் ஆரிய நெறிகளை ஏற்க, அதன் ஒரு கூறாக சமஸ்கிருத சுழற்சி ஆண்டுகளின் பயன்பாடு அதிகரித்து தமிழருக்கான ஆண்டாக மாயத் தோற்றம் பெற்றுவிட்டது.


இருக்கும் இறைமாந்தர்களைக் கவர்ந்து மதுரை அங்கயற்கண்ணியை மீனாட்சியாக்கியது, தஞ்சை பெருவுடையாரை பிரகதீசுவரர் ஆக்கியது, திருச்செந்தூர் குமரவேளை ஸ்கந்தனாக்கியது, வடநாட்டு விநாயகனை அவருக்கு அண்ணனாக்கி உறவுமுறை பின்னியது என்பன போன்றவெல்லாம் எளிதானபோது அதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்றை சுழற்சியாண்டாய் அறிவித்துப் பின்பற்ற வைத்ததெல்லாம் மிகமிக எளிதான செயல்தானே!


ஒட்டுமொத்த தமிழருக்கு என்று தமிழ் நிலத்திற்கு என்று தனித்த ஆண்டுகள் இல்லாத சூழலில், 60 சமசுக்கிருத சுழற்சி ஆண்டுகள் தேவையற்றதென தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட 1970-களில் இருந்தே காரணகாரிய அடிப்படையிலும் வரலாற்றுப் படியும் நிறுவப்பட்டு வந்துள்ளது. அதை அப்போதிருந்த நற்றமிழ்ச் சான்றோர் யாவரும் (தனித்தமிழ் இயக்கத்தில் இல்லாதவர்களும் கூட) தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து ஒருங்கே ஏற்றும் கொண்டனர்.


மேலும், தொன்மையான தமிழ் மரபிற்கும் தொடர் ஆண்டுகள் உருவாக்கப்பட வேண்டிய காலத்தேவையை உணர்ந்தே திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாக வைத்துத் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.


சரி. நீங்க பிறந்த ஆண்டு எதுனா. . . சட்டென சர்வதேச ஆண்டைத்தான் சொல்வீர்கள் 1980. .  1981. . . என்று.


உங்க அப்பா பிறந்த ஆண்டு எதுனா. . . 1950. . . 1951. . .என்பீர்கள்.


சரி தமிழாண்டைச் சொல்லுங்கள் என்றால். . . ???? அந்த 60 சுழற்சி ஆண்டையேதான் சிலர் சொல்வீர்களெனில் 60 வருடத்திற்கு ஒருமுறை மீண்டும் சொன்னதேதான் வரும். அதுவும் தமிழாய் அல்லாது சமசுக்கிருதத்தில்.


நம்ம வயதை விடுங்க. . . குத்துமதிப்பா தமிழின் வயதென்ன? எவ்வித சுய இச்சையின்றி தமிழ் மீது உண்மையான பற்றுள்ள நாம், 'முன் தோன்றிய மூத்தகுடி. . .' என்று தமிழின் பெருமையை நினைத்துப் பெருமைப்பட, அதன் தொடக்கத்தை அறுதியிட்டுக் கூற அறிவியல் படியான கணக்கீடு அவசியமாகிறதே!


இந்த அவசியமே! திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்த வைத்தது. மேலும், அதன் ஆண்டுத் தொடக்கமென தமிழர் பண்பாட்டு மரபின் வழி சுறவம் (தை) ஒன்றை ஆண்டுப் பிறப்பாகவும் தமிழ்ச் சான்றோர்களைத் தீர்மானிக்க வைத்தது.


சரி. . . தமிழ் ஆண்டு பற்றி ஆட்சியாளர்கள் என்ன சொல்றாங்க?


தமிழ்ச் சான்றோர்கள் வகுத்தபடி திருவள்ளுவர் ஆண்டை அரசு நடைமுறைகளில் அலுவல் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தியவர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் (அ.இ.அ.தி.மு.க)


தமிழ்ச் சான்றோர்கள் நிறுவியபடி திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தவர் திரு.மு.கருணாநிதி (தி.மு.க)


திமுக அறிவித்துவிட்டதே என்பதற்காகவே அதனை ஏற்க மறுத்து மீண்டும் சித்திரை 1-ஐ தமிழ்ப்புத்தாண்டு என்றவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.


கொடுமை என்னவெனில், ஜெ.ஜெ-வின் அணிந்துரையோடே 2004-ல் வெளியான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் கூட 'தை முதலே ஆண்டுப்பிறப்பு' என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அவர் முதல்வராவதற்கு முன்பே அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் வெளியாகி அரசால் அங்கீகரிக்கப்பட்ட சில தமிழ் ஆய்வுக் கட்டுரைகளிலும் தை முதல் தேதியை ஆண்டுப் பிறப்பாக்கும் காரணகாரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இதில் மகிழத்தக்க ஒன்று என்னவெனில், திருவள்ளுவர் ஆண்டு என்பது மட்டும் எம்.ஜி.ஆரின் காலத்தில் இருந்து தற்போது வரை அரசு ஆணைகளில் (G.Os) பின்பற்றப்பட்டு வருகிறது.


அதெல்லாம் எனக்குத் தெரியாது. . . ஒலகமே சித்திர ஒன்னத்தேன் கொண்டாடுது. எங்க முன்னோர்களும் அப்புடித்தான் சொல்லீர்க்காங்க என்பதே உங்களின் முடிவெனில். . . சிறப்பாகக் கொண்டாடுங்க உங்களது மகிழ்விற்காக! மன நிறைவிற்காக!


வேறுசிலர் கருணாநிதி சொல்லி நான் கொண்டாடுறதா? திமுக அறிவிச்சத நான் பின்பற்றுவதா? என்றெல்லாம் வெறுத்து ஒதுக்க தமிழ்ப் புத்தாண்டு தனி நபர் சொத்தல்ல. அது இறை வழிபாட்டை ஏற்ற & ஏற்காத இருநிலை தமிழ்ச் சான்றோர்களையும் உள்ளடக்கிய தனித்தமிழ் இயக்கத்தின் பொது முடிவு என்பதை தயைகூர்ந்து உணர வேண்டும்.


மதப்பித்தும் கட்சி வெறுப்பும் தங்களது தெளிவைத் தடுக்குமெனில், உளப்பூர்வ மதிப்பைத் தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்டிருப்பினும், அதனால் தமிழிற்குத் துளியும் பயனில்லை என்பதே உண்மை.


இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், செந்தமிழ் என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றுச் சொல் அல்ல! இனியும் தமிழ் இனிமையாக இளமையாக உயிருள்ள செம்மொழியாகத் தொடர வேண்டுமெனில் உலக அறிவு-இயல் ஓட்டத்திற்கு ஏற்ப அறிவியல் தமிழாகவும் முழுமைபெற வேண்டும் அல்லவா! எனவே, தமிழுக்காக தமிழின் புத்தாண்டைத் தமிழில் தொடர்வோம்.


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன்
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

அறிவோம்_வருமானவரி! - 2

👉🏽 சேமிப்புகளின் வட்டிக்கு, 10,000 வரை தளர்வு

அறிவோம் வருமானவரி! - 1

👉🏽 வீட்டுக்கடன் வட்டிக்கு, 3.5L வரை தளர்வு

👉🏽 கணவன் மனைவி இருவருக்குமே தளர்வு

சனவரி 3 : இந்திய ஒன்றிய பெண்ணாசிரியர் தினம் & பெண்கல்வி தினம்


இந்திய ஒன்றிய வரலாற்றில் மறைக்கப்பட்ட போராளிகளுள் கல்வி & சமூக நலனிற்காக களத்தில் நின்று, அதற்காகவே தமது இறுதி மூச்சையும் துறந்த முதன்மைப் பெண் போராளி ஆசிரியர் சாவித்ரிபாய் புலே!

மெய்யாகவே 'ஆசிரியர் தினம்' என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் அரசே அறிவித்துக் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், சமூகச் சீர்திருத்தவாதியான சாவித்திரிபாய் புலே  பற்றி பாட நூல்களிலேயே இல்லை என்பதே உண்மை.

சரி. யாரிந்த சாவித்திரிபாய்? அப்படி என்ன செய்துவிடார்? ஏன் அவரது பிறந்தநாளை ஆசிரியர் தினமாகவே கொண்டாடியிருக்க வேண்டும்? பெண்ணாசிரிய தினம் & பெண்கல்வி தினமென நினைவு கூறக் காரணமென்ன? அவ்வாறு நினைவுகூற வலியுறுத்தியோர் யார்? பார்க்கலாம் சற்றே விரிவாக.

சாவித்திரிபாய்  03.01.1831-ல் மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் (Naigon ) என்ற கிராமத்தில் பணக்கார விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, கான்டோஜி நைவஸ்  பட்டேல், அன்னை லட்சுமி பாய். தந்தை கிராமத் தலைவராக இருந்தவர்.

சாவித்திரிபாயின் பெற்றோர் அக்கால வழக்கப்படி, அவருக்கு 9  வயதாகும்போது,1840-ல் குழந்தைத் திருமணம் செய்து வைத்தனர். அந்த ஊருக்கு அருகில் உள்ள 13 வயது நிரம்பிய ஜோதிராவ் புலே என்னும் பாலகனுக்கு சாவித்திரியை மணம் முடித்தனர்.

ஜோதிராவ் புலே இளம் வயதிலேயே சமூகச் சீர்திருத்தப் பார்வைமிக்கவராக இருந்ததால், மணமான தமது மனைவி  சாவித்திரிபாய் புலே கல்வி கற்க பள்ளிக்குச் செல்லக்கூடாது என சமூகத்தடை இருந்த காலத்தில், ஜோதிராவ் புலே  4 ஆண்டுகள் தாமே அவருக்குக் கல்வி கற்பித்தார். சாவித்திரிபாய்  கற்றுத்தேர்ந்ததும் ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும்  மறுக்கப்பட்ட கல்வியைத் தருவதென முடிவெடுத்தனர்.

சாவித்திரிபாய் கிறித்தவ பெண் இறையியலாளர் நடத்திய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியப் பணி முடித்தார். சாவித்திரிபாயின் சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளில் இசுலாமியப் பெண்ணான பாத்திமா சேக்கும் அவரது சகோதரர் உஸ்மானும் உடனிருந்தார். 

1847-ல் முதல் பள்ளியைத் தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காகத் துவங்கினர். இதனால் கோபமுற்ற ஆதிக்கவாதிகள் பூலே தம்பதியரை பணியை நிறுத்த நிர்பந்தித்தனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய சூழலில் புனேவின் கஞ்ச் பேத் பகுதியில் உள்ள தமது வீட்டில் பாத்திமா சேக் மற்றும் உஸ்மான் ஆகியோர் அடைக்கலம் அளித்தனர்.

1848-ல் இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக பெண் குழந்தைகளுக்கான முதல் பள்ளியை புனேயிலுள்ள பீடே வாடு என்ற  இடத்தில் 9 பெண் குழந்தைகளுடன் தொடங்கினர். அதில் சாவித்திரிபாய் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார். இந்தப் பள்ளியை அமைக்க உறுதுணையாக இருந்ததோடே தமது இல்லத்திலேயே பள்ளி அமைய இடம் கொடுத்தார் பாத்திமா சேக்.

இந்த பாத்திமா சேக் தான் இந்திய ஒன்றியத்தின் முதல் இசுலாமியப் பெண்ணாசிரியர். இதிலென்ன வியப்பு என்றால், மலாலாவையும் இன்றைய ஆப்கன் பெண்களின் நிலையையும் உற்றுநோக்கினால் 200 ஆண்டுகளுக்கு முந்தைய பாத்திமா சேக் ஆசிரியரானதன் வியப்பு விளங்கும்.

பின் 1849-ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்முறையாக பிற்படுத்தப்பட்ட, தலித்து & அனைத்து சாதி  பெரியவர்களுக்காக உருவாக்கப்பட்ட பள்ளி.

1852-ல்  இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.

1853ம் சனவரி 28-ம் நாள், குழந்தையிலேயே விதவையானவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற மருத்துவமனை அமைத்தார்.

சாவித்திரிபாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும், விதவைகளுக்கும், தவறான உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என அனைவருக்கும் கல்வி கொடுக்க பள்ளியைத் துவங்கினர்.

இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்தப் பள்ளிகள் அரசுப் பள்ளியைவிடச் சிறப்பாகச் செயல்பட்டன. இதனால், 1852, நவம்பர் 14-ல், பிரித்தானிய அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள்  என்ற பாராட்டும் பரிசும்  பெற்றனர்.

1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான  பல்வேறு  ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர்.

பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடிய நடைமுறை அப்போது பின்பற்றப்பட்டது. அந்த மழிக்கும் பணியை செய்யும் நாவிதர் மக்களை வைத்தே, இனி விதவைப் பெண்களுக்கு, மழிக்கும் பணியை  நாங்கள் செய்யமாட்டோம் என சாவித்திரிபாய் அறிவிக்கச் செய்து போராட்டம் நடத்தினார்.

விதவை மறுமணங்களையும் தொடர்ந்து நடத்திக்காட்டினார்.

சாவித்திரிபாய் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும் கல்வி போதித்ததால், இந்து சனாதனவாதிகளுக்குக் கோபம் வந்தது. சாவித்திரி பாய் பள்ளி செல்லும்போது, அவர்மேல் கற்கள், சாணம், மனித மலம் என எல்லாவற்றையும் வீசி எறிந்தது கலாட்டா செய்தனர்.

சாவித்திரிபாய்  வீட்டுக்கு வந்து கணவர் ஜோதிராவ் புலேவிடம் , மனித மலம் வீசியது பற்றி சொன்ன போது , ஜோதிராவ் "கல்வி ஒன்றுதான் மனிதர்களின் வாழ்க்கையைப்  புரட்டிப்போடும்  வல்லமை படைத்தது. கல்வி மட்டுமே சமூக மாற்றத்தைச் செய்ய முடியும். ஆனால், இந்தச் சமூகத்தில், நாம் இருவரும் இவர்களை எதிர்க்க முடியாது. எனவே நீ பள்ளி செல்லும்போது பையில் வேறொரு புடவை எடுத்துச் சென்று, அங்கு குளித்து உடை மாற்றிக் கொள்"  என்றார்.

மக்களுள் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்கள் பொதுக் கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஊர் மக்கள் மறுக்க, அவர்களைத் தமது வீட்டிலேயே தண்ணீர் எடுக்க அனுமதித்தார்  சாவித்திரிபாய் புலே.

சாவித்திரிபாய் நல்ல கவிஞரும் கூட. மராத்திய மொழியின் முதல் பெண் புரட்சிக் கவிஞரும் இவரே!. மராத்தியத்தின் நவீன கவிதைப்போக்கு இவரில் இருந்தே துவங்குகிறது. இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் அவரின் கவிதைகள் பயணித்தன. 1854-ல் அவரது கவிதைத் தொகுப்பான "காவிய மலர்கள்" பிரித்தானிய அரசின் அங்கீகாரத்துடன் வெளியானது.

ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களைப் போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களைப் பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த  இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிக்காவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்திரி பாய்.

சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது  அறுபத்தி ஆறு வயதில், மனித  நேயம் காக்க மனித உயிர்கள் காக்கப் போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியைக் காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய்த் தொற்று ஏற்பட்டது.

கடைசியாக ஒருவரை தூக்கிக் கொண்டு போய் மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு, மருத்துவ மனை வாசலிலேயே மயங்கி விழுந்துவிட்டார். அவர் வேறுயாருமல்ல பெண் கல்விக்காக பள்ளிக்கூடம் துவக்கியோர்களை எதிர்த்து கலவரம் செய்த கங்காராம்.

கங்காராம் உடல்நலம் தேறிய பின்னர், தான் சாவித்திரிபாயால் காப்பாற்றப்பட்டது தெரிந்து, அவரிடம் நன்றி சொல்ல ஓடினார். அங்கே வெள்ளைத்  துணியால் போர்த்தப்பட்டிருந்த சாவித்திரி பாயின் உடலைத் துணியை விலக்கிக் காட்டினார்கள். ஆம், பிளேக் நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்ட சாவித்திரிபாய் அதே நோயால் பாதிக்கப்பட்டு 1897, மார்ச் 10-ம் நாள்  மரணமடைந்தார்.

ஒன்றிய அரசு சாவித்திரிபாய் புலேவுக்கு பெருமை செய்யும் விதமாக,1998-ம் ஆண்டு, அஞ்சல் தலை வெளியிட்டது.

மராட்டிய அரசு  ஜனவரி 3-ம் நாளை பெண்கள் தினமாக  அனுசரிக்கிறது. 

சாவித்திரிபாய் புலேயின் பெயரில் ஓர் பல்கலைக்கழகமும் இருக்கிறது.

டெல்லி பல்கலைக்கழக நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வுகள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் டாம் உல்ப், ஆயிகோஸ் என்ற உலகளாவிய இதழில் ('Oikos Worldviews Journal' - 2008) செக்கோஸ்லோவாகியா நாட்டின் ஜான் கொமேனியஸ் (Jan Comenius) ஐரோப்பிய நவீன கல்வியின் தந்தை என்றும், சாவித்திரிபாய் இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாவித்திரிபாய் பூலே பிறந்ததினமான ஜனவரி 3 அன்று மகளிர் கல்வி தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி 2017-ல் தீர்மானித்தது.

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 2022 முதல் சாவித்திரிபாய் பூலே பிறந்ததினத்தை இந்திய ஒன்றிய பெண்ணாசிரியர் தினமாக நினைவுகூற அறைகூவல் விடுத்துள்ளது.

தரவுகள்  :
பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம்
தி பெட்டர் இன்டியா.காம்

கி.பி 2022 ஆங்கிலப் புத்தாண்டா? சர்வதேசப் புத்தாண்டா?

பூமி சூரியனைச் சூற்றும் மற்றுமொரு முழுமையான சுற்று, இந்திய நேரப்படி நேற்று (31.12.2021) பிற்பகல் 2:30 மணிக்கு, பூமிக் கோளத்தின் கிரிபாட்டி (Christmas Island) தீவுப் பகுதியில் தொடங்கி இன்று (01.01.2022) மாலை 5:30 மணிக்கு பாகர் & ஹாலந்து தீவுகளின் பகுதியோடே நிறைவாகிறது.

இதனூடாய் சர்வதேச மக்களோடு நாமும் முழுமையாக கி.பி 2022-ற்குள் கடந்து வரப்போகிறோம்.

நாம் தற்போது பயன்படுத்தும் சனவரி 1-ல் தொடங்கும் நாட்காட்டியானது கி.மு 45-ல் ரோமப் பேரரசர் சூலியசு சீசர் உருவாக்கிய சூலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமாக, சூரியச் சுற்றினை கணக்கில் வைத்து, இயேசு கிறித்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு, உலக வரலாற்றை கிறித்துவிற்கு முன் (கி.மு) & கிறித்துவிற்குப் பின் (கி.பி) என்று பகுத்து, இத்தாலிய மருத்துவர் அலோயிசியசு லிலியசு முன்மொழிய, கிறித்துவத் திருத்தந்தை 13-ஆம் கிரகோரி-யின் அறிவிப்புப்படி 24.02.1582 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நாட்காட்டி கிரெகோரியன் (Gregorian) நாட்காட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

இது, நம்மவர்கள் (ஆட்சியாளர்கள் உட்பட) சுட்டுவதுபோல ஆங்கில நாட்காட்டி அல்ல.

இத்தாலியரின் உருவாக்கத்தில் முடிவாகி உலக நாடுகளால் பல்வேறு காலகட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச தபால் ஒன்றியம் & ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொது நாட்காட்டியாக இன்று பின்பற்றப்பட்டு வருகிறது.

கி.பி1752-ல் தான் பிரித்தானிய அரசு இந்நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது. அதாவது இந்நாட்காட்டி நடைமுறைக்கு வந்து சுமார் 200 ஆண்டுகள் கழித்துத்தான் ஆங்கிலேயர்களே இதை ஏற்றுக் கொண்டனர்.

அதன்பின், பிரித்தானியர்களின் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியத் துணைக்கண்டத்தின் சுமார் 500 நாடுகளிலும் (தனித்த மன்னராட்சிப்பகுதிகள்) இந்நாட்காட்டி பயன்படுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக, 1947 ஆகத்து 15-ல் உருவான இந்திய ஒன்றியத்திலும் நடைமுறையில் உள்ளது.

நிற்க. ஆங்கிலேயர்கள் என்று கூறப்படும் பிரித்தானியர்களால் இங்கு கொண்டுவரப்பட்டாலும் இது ஆங்கில நாட்காட்டி அல்ல என்பதால், 'கி.பி 2022 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!' எனத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

ஒவ்வொரு புத்தாண்டுத் தொடக்கமும் நமக்கு நினைவூட்டுவது,

அதிகரித்துவிட்ட வாழ்வியல் அனுபவ அறிவு!

ஓர் ஆண்டு குறைந்துவிட்ட எஞ்சிய ஆயுட்காலம்!

உலக வரலாற்றை இருகூறாக்கிய இயேசு கிறித்துவின் போதனையான, 💞'உங்களிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருங்கள்'💞_ என்பவையே!

வேதாகமம் 'அன்பு' குறித்து பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

💝நீடிய சாந்தமுள்ளது,
💝தயவுமுள்ளது,
💝பொறாமையில்லாதது,
💝தன்னைத்தான் புகழாது,
💝இறுமாப்பாயிராது,
💝அயோக்கியமானதைச் செய்யாது,
💝தற்பொழிவை நாடாது,
💝சினமடையாது,
💝தீங்கு நினையாது,
💝அநியாயத்தில் மகிழாது,
💝சத்தியத்தில் மகிழும்,
💝சகலத்தையும் தாங்கும்,
💝சகலத்தையும் விசுவாசிக்கும்,
💝சகலத்தையும் நம்பும்,
💝சகலத்தையும் சகிக்கும்.

பெற்ற அனுபவங்களை
உய்த்து உணர்ந்து,
உலக வரலாற்றை
இருகூறாய்ப் பகுத்திட்ட
இயேசுகிறித்து கற்பித்த
பரிபூரண அன்பினைப்
பகிர்ந்து அளித்து
எஞ்சிய காலமதை
இன்பமாக்கிக் களித்திருப்போம்!

அன்புகனியும் சர்வதேசப் புத்தாண்டு வாழ்த்துகள்!