தமிழ் நிலத்திற்குரியது இயற்கை வழிபாடு / முன்னோர் வழிபாடே. தமிழ் நிலத்திற்கான பரந்துபட்ட சமயமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று மற்றதைக் கொன்று / கவர்ந்து நிமிர்ந்து வளர்ந்துள்ளது. இவ்வரிசை ஆசீவகம் - பௌத்தம் - சமணம் - சைவம் - வைணவம் என்று நீண்டு பார்ப்பனிய (Brahmanism) ஆதிக்கத்தின் பின்பு, பிரித்தானியர் ஆட்சியில் இந்து என பொதுமைப்படுத்தப்பட்டுவிட்டது. இம்மாற்றங்களுக்கு ஆரியரின் வருகையே முதன்மைக் காரணம். இவ்வருகை வழிபாட்டில் மட்டுமல்லாது மொழியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அரேபிய & ஐரோப்பியப் படையெடுப்புகளால் தமிழின் இனிமை குன்றவில்லை. மாறாகத் தமிழ் கடல் கடந்து எடுத்துச் செல்லப்பட்டது. இவர்களின் மார்க்க விரிவும் தமிழை அழிக்கவில்லை, மாறாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை மேன்மைக்குட்படுத்தியது. இவ்விரு மார்க்கமும் இங்கிருந்ததைச் சொந்தம் கொண்டாடவில்லை. கிறித்துவ வேதாகமமான விவிலியம் தமிழில் மொழி பெயர்ந்தது. திருக்குறள், திருவாசகம் உள்ளிட்டவை உலக மொழிகளில் விரிந்தது. மொழிசார் வளர்ச்சிக்கான அறிவியலின் கொடையெனில் அது அச்சுக்கருவியே! அதில் அச்சேறிய முதல் தெற்காசிய மொழி (விவிலியத்தின் வழி) தமிழே! இன்றும் தமிழ் முழுமையான அனுதினப் பயன்பாட்டில் இருப்பதும், தமிழறிஞர்கள், செய்தி ஊடகங்கள் மற்றும் பள்ளிகளைத் தவிர்த்து தமிழ்க் கிறித்தவர்களிடம் தான். அவர்களின் அனுதின ஆலய / இல்ல இறை தேடலின் வேத வாசிப்பின் வழி தமிழ் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனால், கோயில்களில் தமிழில் பூசை செய்ய வழக்காட வேண்டியுள்ளதே ஏன்?
நிற்க.
தமிழில் சமசுக்கிருதச் சொற்கள் நுழைவு என்பது ஆரியர்களின் வருகைக்கு பின்பானதே. திராவிட மொழிகளாகக் கருதப்படும் தெலுங்கு, மலையாள & கன்னட மொழிகளின் பிறப்பு என்பதும் சமசுக்கிருதச் சேர்கையால் உண்டான திரிபே!
ஆரியர்கள் தமது வேத சாத்திர & தந்திரக் கோட்பாடுகளை தமிழ் நிலத்தின் மீதிருந்த இறை வழிபாட்டுக் கூறுகளுடன் சேர்த்துக் கொண்டு (கவர்ந்து) யாவற்றிற்கும் தலைமையானதாகத் தங்களைச் சித்தரித்தனர். இச்சித்தரிப்பில் மயங்கிய மன்னர்கள் ஆரிய நெறிகளை ஏற்க, அதன் ஒரு கூறாக சமஸ்கிருத சுழற்சி ஆண்டுகளின் பயன்பாடு அதிகரித்து தமிழருக்கான ஆண்டாக மாயத் தோற்றம் பெற்றுவிட்டது.
இருக்கும் இறைமாந்தர்களைக் கவர்ந்து மதுரை அங்கயற்கண்ணியை மீனாட்சியாக்கியது, தஞ்சை பெருவுடையாரை பிரகதீசுவரர் ஆக்கியது, திருச்செந்தூர் குமரவேளை ஸ்கந்தனாக்கியது, வடநாட்டு விநாயகனை அவருக்கு அண்ணனாக்கி உறவுமுறை பின்னியது என்பன போன்றவெல்லாம் எளிதானபோது அதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்றை சுழற்சியாண்டாய் அறிவித்துப் பின்பற்ற வைத்ததெல்லாம் மிகமிக எளிதான செயல்தானே!
ஒட்டுமொத்த தமிழருக்கு என்று தமிழ் நிலத்திற்கு என்று தனித்த ஆண்டுகள் இல்லாத சூழலில், 60 சமசுக்கிருத சுழற்சி ஆண்டுகள் தேவையற்றதென தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட 1970-களில் இருந்தே காரணகாரிய அடிப்படையிலும் வரலாற்றுப் படியும் நிறுவப்பட்டு வந்துள்ளது. அதை அப்போதிருந்த நற்றமிழ்ச் சான்றோர் யாவரும் (தனித்தமிழ் இயக்கத்தில் இல்லாதவர்களும் கூட) தமிழ் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து ஒருங்கே ஏற்றும் கொண்டனர்.
மேலும், தொன்மையான தமிழ் மரபிற்கும் தொடர் ஆண்டுகள் உருவாக்கப்பட வேண்டிய காலத்தேவையை உணர்ந்தே திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாக வைத்துத் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.
சரி. நீங்க பிறந்த ஆண்டு எதுனா. . . சட்டென சர்வதேச ஆண்டைத்தான் சொல்வீர்கள் 1980. . 1981. . . என்று.
உங்க அப்பா பிறந்த ஆண்டு எதுனா. . . 1950. . . 1951. . .என்பீர்கள்.
சரி தமிழாண்டைச் சொல்லுங்கள் என்றால். . . ???? அந்த 60 சுழற்சி ஆண்டையேதான் சிலர் சொல்வீர்களெனில் 60 வருடத்திற்கு ஒருமுறை மீண்டும் சொன்னதேதான் வரும். அதுவும் தமிழாய் அல்லாது சமசுக்கிருதத்தில்.
நம்ம வயதை விடுங்க. . . குத்துமதிப்பா தமிழின் வயதென்ன? எவ்வித சுய இச்சையின்றி தமிழ் மீது உண்மையான பற்றுள்ள நாம், 'முன் தோன்றிய மூத்தகுடி. . .' என்று தமிழின் பெருமையை நினைத்துப் பெருமைப்பட, அதன் தொடக்கத்தை அறுதியிட்டுக் கூற அறிவியல் படியான கணக்கீடு அவசியமாகிறதே!
இந்த அவசியமே! திருவள்ளுவராண்டை நடைமுறைப்படுத்த வைத்தது. மேலும், அதன் ஆண்டுத் தொடக்கமென தமிழர் பண்பாட்டு மரபின் வழி சுறவம் (தை) ஒன்றை ஆண்டுப் பிறப்பாகவும் தமிழ்ச் சான்றோர்களைத் தீர்மானிக்க வைத்தது.
சரி. . . தமிழ் ஆண்டு பற்றி ஆட்சியாளர்கள் என்ன சொல்றாங்க?
தமிழ்ச் சான்றோர்கள் வகுத்தபடி திருவள்ளுவர் ஆண்டை அரசு நடைமுறைகளில் அலுவல் பயன்பாட்டிற்கு நடைமுறைப்படுத்தியவர் திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் (அ.இ.அ.தி.மு.க)
தமிழ்ச் சான்றோர்கள் நிறுவியபடி திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தவர் திரு.மு.கருணாநிதி (தி.மு.க)
திமுக அறிவித்துவிட்டதே என்பதற்காகவே அதனை ஏற்க மறுத்து மீண்டும் சித்திரை 1-ஐ தமிழ்ப்புத்தாண்டு என்றவர் செல்வி.ஜெ.ஜெயலலிதா.
கொடுமை என்னவெனில், ஜெ.ஜெ-வின் அணிந்துரையோடே 2004-ல் வெளியான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் கூட 'தை முதலே ஆண்டுப்பிறப்பு' என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அவர் முதல்வராவதற்கு முன்பே அஇஅதிமுக ஆட்சிகாலத்தில் வெளியாகி அரசால் அங்கீகரிக்கப்பட்ட சில தமிழ் ஆய்வுக் கட்டுரைகளிலும் தை முதல் தேதியை ஆண்டுப் பிறப்பாக்கும் காரணகாரியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் மகிழத்தக்க ஒன்று என்னவெனில், திருவள்ளுவர் ஆண்டு என்பது மட்டும் எம்.ஜி.ஆரின் காலத்தில் இருந்து தற்போது வரை அரசு ஆணைகளில் (G.Os) பின்பற்றப்பட்டு வருகிறது.
அதெல்லாம் எனக்குத் தெரியாது. . . ஒலகமே சித்திர ஒன்னத்தேன் கொண்டாடுது. எங்க முன்னோர்களும் அப்புடித்தான் சொல்லீர்க்காங்க என்பதே உங்களின் முடிவெனில். . . சிறப்பாகக் கொண்டாடுங்க உங்களது மகிழ்விற்காக! மன நிறைவிற்காக!
வேறுசிலர் கருணாநிதி சொல்லி நான் கொண்டாடுறதா? திமுக அறிவிச்சத நான் பின்பற்றுவதா? என்றெல்லாம் வெறுத்து ஒதுக்க தமிழ்ப் புத்தாண்டு தனி நபர் சொத்தல்ல. அது இறை வழிபாட்டை ஏற்ற & ஏற்காத இருநிலை தமிழ்ச் சான்றோர்களையும் உள்ளடக்கிய தனித்தமிழ் இயக்கத்தின் பொது முடிவு என்பதை தயைகூர்ந்து உணர வேண்டும்.
மதப்பித்தும் கட்சி வெறுப்பும் தங்களது தெளிவைத் தடுக்குமெனில், உளப்பூர்வ மதிப்பைத் தமிழ் மொழியின்பால் தாங்கள் கொண்டிருப்பினும், அதனால் தமிழிற்குத் துளியும் பயனில்லை என்பதே உண்மை.
இனிமைத் தமிழ், இளமைத் தமிழ், செந்தமிழ் என்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றுச் சொல் அல்ல! இனியும் தமிழ் இனிமையாக இளமையாக உயிருள்ள செம்மொழியாகத் தொடர வேண்டுமெனில் உலக அறிவு-இயல் ஓட்டத்திற்கு ஏற்ப அறிவியல் தமிழாகவும் முழுமைபெற வேண்டும் அல்லவா! எனவே, தமிழுக்காக தமிழின் புத்தாண்டைத் தமிழில் தொடர்வோம்.
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன்
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_
No comments:
Post a Comment